ஈரானின் கடந்த 11 நாட்களில் அரச எதிர்ப்பாளர்கள் 76 பேர் அந்நாட்டு பாதுகாப்பு படைகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக மனித உரிமைக் குழுக்கள் தெரிவித்துள்ளன.
ஹிஜாப் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்ட பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து, ஈரானில் ஹிஜாப் எதிர்ப்பு மற்றும் அரசுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
இவ்வாறான போராட்டக்காரர்களை அடக்குவதற்காக ஈரான் பாதுகாப்பு படைகள் நேரடி துப்பாக்கிச் சூடுகளை நடத்தியுள்ளதாக நோர்வேயை தளமாகக் கொண்ட ஈரான் மனித உரிமைகள் அமைப்பு (IHR) தெரிவித்துள்ளது.
அத்துடன், நூற்றுக்கணக்கான மக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 20 பேர் பத்திரிகையாளர்கள் எனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
போராட்டக்காரர்களை சித்திரவதை செய்யப்படுவதுடன், மோசமாக நடத்தப்படுகின்றனர். எதிர்ப்பை வெளிப்படுத்தும் போராட்டக்காரர்கள் மீது நேரடி துப்பாக்கிச் சூடு நடத்தப்படுகிறது. இது சர்வதேச குற்றமாகும் என ஈரான் மனித உரிமைகள் அமைப்பின் ஆணையாளர் மஹ்மூத் அமிரி-மொத்தம் கூறினார்.
ஈரானிய மக்களின் அடிப்படை உரிமைகளுக்கான கோரிக்கைகளுக்கு எதிராக ஆயுதப் படைகளை ஏவி, அடக்குமுறைகளை பிரயோகிப்பது கவலையளிக்கிறது. அமைதியான முறையில் போராட்டம் நடத்தும் உரிமைக்கு மதிப்பளிக்குமாறு ஈரான் அரசை வலியுறுத்துகிறோம் எனவும் அவர் தெரிவித்தார்.
ஈரானில் ஹிஜாப் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்ட மாஷா அமினி என்ற பெண் 3 நாட்கள் கோமாவில் இருந்த நிலையில் கடந்த இரு வாரங்களுக்கு முன் உயிரிழந்தார்.
இதனையடுத்தே ஹிஜாப்களை தீயிட்டுக் கொளுத்தி பெண்கள் பெரும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், ஈரானில் போராட்டக்காரர்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இதுவரை 76 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈரானில் பெண்கள் தலையை ஹிஜாப் கொண்டு மறைக்க வேண்டும் எனவும் கைகள் மற்றும் கால்களை மறைக்க வேண்டும் என்றும் சட்டம் உள்ளது. இந்தச் சட்டத்தை மீறியதாக குற்றம் சாட்டப்பட்ட மாஷா அமினி என்ற பெண் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட மாஷா அமினி, பொலிஸாரால் சித்திரவதை செய்யப்பட்டதாகவும் அவரது தலையை ஒரு வாகனத்தின் மீது மோதியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் பொலிஸாரின் சித்திரவதையின் போது மாஷா அமினி உயிரிழந்ததாக கூறப்படுவதை பொலிஸார் மறுத்துள்ளனர். பொலிஸ் காவலில் மாஷா அமினிக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும் அதனாலேயே அவர் இறந்ததாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
எனினும் அமினி கைது செய்யப்பட்டபோது அவர் மிகவும் ஆரோக்கியமாக இருந்ததாக குடும்பத்தினர் கூறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.